இலக்கியம் பேசி மகிழவோ!
ஆசிரியர் ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்
ஆக்க உரை
“இலக்கியம் பேசி மகிழவோ!” எனும் தலைப்பில் உரையாற்ற வருமாறு மதுரை வானொலி நிலையத்தார் விடுத்த அழைப்பு என் சிந்தனையைக் கிளறி விட்டது. “இலக்கியம் பேசி மகிழ வா!” என என்னை மட்டுமின்றிப் பலரையும் கூவி அழைக்கும் பொது அழைப்பாக என் உணர்வுகளுக்கு வழி காட்டியது. இளமை முதலே இத்தகைய வழியமைப்புகளைப் பற்றி நிற்கும் வாய்ப்புகள் எனக்குக் கிட்டின. அவற்றைப் பெறற்கரிய பேறுகளாகக் கருதித் தடம் மாறாமல் நடக்க முயன்றேன். அழகப்பர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றபோது அங்கு நிலவிய தமிழியக்கம் என்னையும் ஈர்த்தது. ‘அறம் பிழைத்தால்’ எனும் தலைப்பில் எழுதிய போட்டிக் கட்டுரையில் கிட்டிய பரிசு எனக்கு ஊக்கமூட்டியது. திருக்குறளை ஆழமாகப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை என் மனதில் வேள்வித் தீயாக வளர்த்தது. திருச்சி சமால் முகமது கல்லூரியில் பொருளாதார முதுகலை கற்றபோதும் என் நினைப்பெல்லாம் உணர்வெல்லாம் திருக்குறளையும் தமிழ் இலக்கியத்தையுமே வலம் வந்தன. வணிக வாழ்வுக்கு ஆட்பட்டுப் பல்வேறு பொறுப்புகளுக்கு உட்பட்ட போதிலும், என்னுள்ளே இலக்கிய உணர்வுகள் மட்டும் மங்காமலே சுழன்று கொண்டிருந்தன. திருக்குறள் பேரவை முதலிய இலக்கிய விழாக்கள், அறிஞர் பெருமக்களின் அரிய தொடர்புகள் என்பன எல்லாம். அந்த உணர்வுக்கனலை ஓங்கி எரியச்செய்தன. இந்த இலக்கிய எரிமூட்டம் எனக்கு எப்போதும் இதமளித்தே வந்தது. இலக்கியம் ஆழ்ந்தகன்ற, என்றும் நிலைபெற்று வருகிற மனிதப் பண்புடன் தொடர்புடையது: மனிதனுடைய வாழ்வெனும் தத்துவத்திலிருந்து வடிவெடுப்பது: ஒருவரது அனுபவங்களையும் எண்ணங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வழியமைப்பது. அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது நம்மையும் அறியாமலே நமக்குள்ளே ஒருவகைக் கலைத்திறமையை உருவாக்கிட வல்லது. நாம் அகம், புறம் எனும் இருவகை மனத்தோடு வாழ்கிறோம். விழிப்பும் கூர்மையும் உடைய, பொறிகளின் சார்புடைய புற மனத்திற்கு அடிமைப்படுவதே நம் வாழ்வில் பெரும் பகுதியாகப் போகிறது. உணர்ச்சியும் கற்பனையும் கலந்த அகமனதோடு உறவு பூண்டு ஆட்படுவதென்பது மிக அரிதாகவே கிட்டுகிறது. அக புற மனங்களில் சமநிலை கண்ட சான்றோர்கள் அருளிய இலக்கியங்களைப் பேசி மகிழும்போதுதான் நமக்கும் ஒருவகைச் சமநிலை அமையும் வாய்ப்பேற்படுகிறது. தொட்டணைத் தூறும் மணற் கேணியாகக் கற்றணைத் தூறும் அறிவு கிட்டுகிறது. இத்தகைய வாய்ப்பினை வளரும் தலைமுறைக் கெல்லாம் வழங்கக் காத்திருக்கும் இலக்கியச் செல்வங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. என்றும் வாழும் இலக்கியமான திருக்குறளில் இச் செல்வங்கள், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய, வாழ்வுக்கினிய வளங்களை எல்லாம் ஆக்கித்தர வல்லவையாக விளங்குகின்றன. பயிலும் போது இன்பம் ஊட்டி, வாழும் முறைக்கு நற்பண்புகளால் வலிமை சேர்க்கும் திருக்குறள் முதலிய இலக்கியங்களை பிறறோடு பேசி மகிழ்ந்த நாள்கள் பலப்பல. ‘காற்றில் வைத்த கற்பூரம் போல’ இவை போய்விடக்கூடாதே எனக் கருதிய எனது கெழுதகை அன்பார் பேராசிரியர் சு.குழந்தைநாதன். நானும் அறியாமலே அவற்றை முயன்று தொகுத்து வந்தார். சிதறி உதிர்நத மலர்களை எல்லாம் என்றும் மணக்கும் மாலையாகக் கட்டித் தந்த பேராசிரியர்க்கு உளமார நன்றி பாராட்டுகிறேன். ‘பாளையம் இல்லம்’ அடையாத நெடு வாயில்களைக் கொண்ட செழுங்குடிச் செல்வமனை. தளர்ந்து வந்தோரையெல்லாம் தாங்கி உயர்த்திய தமிழ்வேள், பி.டி ராசன் அவர்களின் அருந்தவப் புதல்வர் – அறிஞர் பழனிவேல் ராசனார்; – கல்விச் செம்மல்: காழ்ப்பு வெறுப்பற்ற கருணைப் பாங்கினார். என்னோடு இலக்கியம் பேசி வழிகாட்டிய அப்பேரறச் செல்வர் – இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பது எனக்கமைந்த பொரும் பேறு. பழனிவேல் ராசனார்க்கு பணிவார்ந்த் நன்றியுடையேன். தமிழ் மாமுனிவர் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கட்கு ஆயிரமாயிரம் அன்பர் குழாம் உண்டு: அதற்கு அப்பாலும் அடி சார்நத அடியவனான என்னைத் திருக்குறளால் பிணைத்து அருள்பாலித்து ஆட்கொண்டார். வாழும் சமுதாயத்தையும் வாழ்விக்கும் சமயத்தையும் இரு கண்களாகக் கொண்ட அப்பெருந்தகை – இந்நூலுக்கு ஆசியுரை நல்கத் திருவுளம் கொண்டார். அழகியதொரு அணிந்துரையைத் திறனாய்வாக வழங்கியுள்ளார். தெய்வ நலம் காட்டும் மாமுனிவரின் திருப்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன். அகரம் வெளியீடுகள்-தமிழ் மக்களுக்கு ஆக்கமிகு நலம் தரும் நூல்களை அணி சேர்த்துப் பரப்பி வருகின்றன. தனி முத்திரையோடு, தரமான நூல்களை வெளியிடுவதையே நோக்காகக் கொண்ட இவ்வெளியீட்டு வரிசையில், எனது படைப்புக்களும் இடம் பெறச் செய்த பேராசிரியா மீரா அவர்கட்குப் பெரிதும் கடப்பாடுடையேன். இலக்கியம் பேசி மகிழ்வதில் இணையற்ற நலம் காணவருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
மேலாண்மை இயக்குநர்,
நியூ காலேஜ் ஹவுஸ்,
மதுரை – 1
|